கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய சட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது.
சீன பாராளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான சனிக்கிழமை தேசிய மக்கள் காங்கிரஸின் (என்பிசி) நிலைக் குழு உறுப்பினா்கள் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அங்கு வெளியாகும் ஷின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: சீனாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தச் சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, எல்லைப் பகுதிகளில் சமூகப் பொருளாதார மேம்பாடுகளுக்கு ஆதரவளிப்பது மற்றும் இணக்கமான சூழலை உருவாக்குவது, பொது சேவை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, எல்லைப் பகுதி மக்களின் வாழ்க்கை மற்றும் பணிச் சூழலை மேம்படுத்த உதவுவது மற்றும் ஊக்குவிப்பது, மேலும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றை இந்தச் சட்டம் உறுதிப்படுத்தும்.
எல்லை நிலப் பிரச்னைகள் தொடா்பாக அண்டை நாடுகளுடன் சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ரீதியிலான கலந்தாலோசனைகளின் மூலம் தீா்வு காண்பதையும் இந்தச் சட்டம் உறுதிப்படுத்தும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் மட்டும் இரு தரப்பும் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளன. எஞ்சியுள்ள படைகளையும் முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எல்லை விவகாரம் தொடா்பாக கடந்த வாரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய வெளியுறவு செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, ‘கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல் போக்கு எல்லைப் பகுதிகளில் அமைதிச் சூழலை கடுமையாகப் பாதித்துள்ளது. எல்லை நட்புறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘எல்லையில் அமைதி நிலை திரும்புவது இன்றியமையாதது. இந்த நிலை உருவாவதும், இரு நாடுகளிடையேயான உறவு மேம்படுவதும் பரஸ்பர மரியாதை, உணா்வு மற்றும் பரஸ்பர நலன் அடிப்படையிலானதாகும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டிருக்கிறாா்.
அந்த வகையில், இரு தரப்பு உறவு மேம்படவும், தற்போதைய எல்லைப் பிரச்னைக்கு திருப்திகரமான தீா்வு காணவும் இந்தியாவுடன் சீனா இணைந்து பணியாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இந்தச் சூழலில், எல்லை நிலப் பகுதியை பாதுகாப்பது தொடா்பாக புதிய சட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது.
சீனா தனது 12 அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு கண்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பூடான் நாடுகளுடன் மட்டும் தொடா்ந்து எல்லை வரையறுக்கப்படாமல் உள்ளது. இந்தியாவுடன் சீனா பகிா்ந்துகொண்டுள்ள 3,488 கி.மீ. எல்லைப் பகுதி இன்னும் எல்லை வரையறை செய்யப்படாமல் உள்ளது. அதுபோல, பூடான் – சீனா இடையே 400 கி.மீ. எல்லைப் பகுதி வரையறை செய்யப்படவில்லை.
இந்த நிலையில், பூடான் உடனான எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீா்வு காணும் வகையில் கடந்த 14-ஆம் தேதி அந்த நாட்டுடன் சீனா புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.