நாட்டை உலுக்கக் கூடிய பல அரசியல் இரகசியங்கள் அடங்கிய சர்ச்சைக்குரிய பெருந்தொகையான குரல் பதிவுகள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவிடம் இருப்பதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் முதலாவது குரல் பதிவு அண்மையில் கசிய விடப்பட்டதுடன் அதில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நிமல் லங்சாவை அச்சுறுத்தும் வகையில் தொலைபேசியில் உரையாடும் குரல் பதிவு காணப்பட்டது.
இந்த நிலையில், இப்படியான மேலும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட நிமல் லங்சா திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் தற்போது பலர் நிமல் லங்சாவை இலக்கு வைத்து தாக்குதலை நடத்துவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே நிமல் லங்காவிடம் இருப்பதாக கூறப்படும் குரல் பதிவுகளை அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் அவருடன் கலந்துரையாடல்களை நடத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தை விமர்சித்ததன் காரணமாக ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்ட போது, கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுசிலை போல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் குறைகளை வெளியிட்டு வரும் நிமல் லங்சாவுக்கு எதிராக ஏன் இப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற காரணத்தை கூறியிருந்தார்.
“ நிமல் லங்சாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், காரணம், அனைத்தையும் அறிந்த மனிதர் அவர்” எனக் கூறியிருந்தார்.