இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற கஸ்டங்களை தெ ஹிந்து நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் தொலஸ்வேல கிராமத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளி பி.சுந்தரராஜன்,தாம் நாளாந்தம் இரண்டு தடவைகள் பருகும் தேனீரை, தற்போது ஒரு முறையாக குறைத்துள்ளமையை தெ ஹிந்து நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
பால்மா எளிதில் கிடைக்காத காரணத்தினால் தாம் இந்த உணவுக்குறைப்பை செய்ததாக சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற சிலோன் டீயை உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை, இலங்கையின் பொருளாதார யதார்த்தை உணர்த்துவதாக தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
அன்னியச் செலாவணியைச் சேமிப்பதற்காக விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அரிசி, பருப்பு, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் ஏராளமான நுகர்வோர் திணறி வருகின்றனர்.
பெருந்தோட்டத்தொழிலாளர்கள், நாளாந்தம் 1000 ரூபா வேதனத்துக்காக கடினமான பணிகளை செய்யும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் காரணமாக ஒரு கோப்பை தேனீரையும் துறக்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பெருந்தோட்டத்துறையின் பல குழந்தைகள் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய பற்றாக்குறையால் அந்த நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாக பெருந்தோட்டத்துறையை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். பல
தலைமுறைகளாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சமூகத்தின் நீண்டகால நில உரிமைகள் குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
“எங்களுக்குச் சொந்தம் என்று ஒரு நிலம் இருந்தால், நாங்கள் ஒரு சிறிய வீட்டைக் கட்டலாம், சில காய்கறிகளை பயிரிடலாம், சிறு தொழில் ஆரம்பிப்பதற்கான ஆவணங்களைக் காண்பித்து வங்கிக் கடனைப் பெறலாம்”
எனினும் தமக்கு எந்த உரிமையும் இல்லாமையால் எதையும் செய்ய முடியாது. எதிரில் இருக்கும் மரத்தின் கிளைகளைக்கூட தம்மால் வெட்ட முடியாது என்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூறுவதாக தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது.