பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.
இதன்போது பழைய சட்டத்துக்கும், புதிய சட்டமூலத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விவரித்தார். அத்துடன். இது இறுதி வடிவம் அல்ல, ஆரம்பக்கட்ட திருத்தங்கள் மாத்திரமே, எதிர்காலத்தில் மேலும் திருத்தங்கள் முன்வைக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களால் சட்டமூலம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விவாதத்தின்முடிவில் சட்டமூலம்மீது வாக்கெடுப்பை அநுரகுமார திஸாநாயக்க கோரினார். இதன்படி இரண்டாம்வாசிப்புமீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 86 பேரும், எதிராக 35 பேரும் வாக்களித்தனர்.
பின்னர் குழுநிலை விவாதத்தின்போது வெளிவிவகார அமைச்சரால் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, சட்டமூலம் திருத்தப்பட்டது . இறுதியில் சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய அறிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை வழங்கிய பின்னர், சட்டம் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.