மின்சாரம் தயாரிக்க தேவையான 8 நிலக்கரி கப்பல்களை விடுவிக்க அரசாங்கம் தவறினால் மின் நெருக்கடி அதிகரித்து ஒக்டோபர் வரை மின்வெட்டு தொடரும் என மின்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் மின் உற்பத்திக்குத் தேவையான 480,000 மெற்றிக் தொன் நிலக்கரியை பருவமழைக் காலம் தொடங்கும் முன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருவமழை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலமாக எதிர்பார்க்கப்படுவதுடன், எதிர்வரும் செப்டம்பர் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பருவமழை காலகட்டத்தில், சீரற்ற காலநிலை காரணமாக நிலக்கரி கப்பல்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இந்த நிலைமையை முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், இந்த பாரதூரமான நிலை குறித்து நிதியமைச்சு உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்கின்றது.
ரஷ்யா – உக்ரைன் மோதலால் ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரி கொள்வனவு எப்போது நிறுத்தப்படும் என்ற நிச்சயமற்ற நிலை இருப்பதாக மின்சார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் நமது துறைமுகங்களுக்கு வந்தாலும் கடனுதவி கடிதம் திறக்கப்பட்டு பணம் செலுத்தப்பட்டாலும் கப்பல்களுக்கு நிலக்கரி ஏற்றும் முன் உரிய நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், எட்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம் எனவும் பருவமழையில் கப்பல்கள் சிக்கினால் நிலக்கரி தரையிறங்குவது செப்டம்பர் வரை தாமதமாகும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கப்பல்கள் ஒரே நேரத்தில் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரியை ஏற்றிச் செல்வதுடன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட 8 கப்பல்களும் பணம் செலுத்தாமல் விடுவிக்கப்படாவிட்டால், இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியால் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.