பதுளை – ஹாலி எல, உடுவரை பகுதியில் நடுவீதியில் மாணவியொருவர், கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பாடசாலைக்கு சென்று வீடு, திரும்பிய 18 வயதான மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். பழைய பகையொன்றே இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய 32 வயதான சந்தேகநபர், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் தலைமறைவான , சந்தேகநபர் இன்று அதிகாலை ஹாலிஎல பொலிஸில் ஆஜரானார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒருவருடமாக குறித்த மாணவியை சந்தேகநபர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் அதனை அம்மாணவி நிராகரித்து வந்துள்ளார்.
அதேவேளை அத்துடன் மாணவியின் பெற்றோரும் காதலை எதிர்த்தமையால், மாணவியின் பெற்றோர், சந்தேகநபரால் இதற்கு முன்னர் கத்திகுத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக தகவல் ,
கொலையுண்ட மாணவி ஹாலி-எலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்று வந்தவராவார். சம்பவம் தொடபில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணையில், கொலையுண்ட மாணவியை, அதே தோட்டத்தைச் சேர்ந்த இராமையா திபாகரன் என்ற 32 வயது இளைஞன் காதலித்து வந்துள்ளார்.
இக் காதலை அம் மாணவி நிராகரித்ததினால், ஆத்திரம் கொண்ட அவ் இளைஞன் கோடரியினால் அம் மாணவியைத் தாக்கி கொலை செய்துள்ளமையும், நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கிடையில் தகராறுகள் இருந்ததாகவும இரு வேறுபட்ட கருத்துக்களாக தெரியவந்துள்ளது. அத்துடன் இக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியையும், பொலிசார் அருகாமையிலுள்ள பற்றைக்குள்ளிருந்து மீட்டுள்ளனர்.
கொலையுண்ட மாணவி, கல்வித் துறையில் சிறந்து விளங்கியவரென்று, அம்மாணவி கல்வி கற்று வந்த பாடசாலை ஆசிரியர் சமூகத்தினர் குறிப்பிட்டனர். தர்மராஜா நித்யா என்ற மாணவி வழமை போன்று பெற்றோரை விழுந்து வணங்கிவிட்டு, புத்தகப் பையையும் முதுகில் மாட்டிக் கொண்டு, 08-03-2022ல் காலை பாடசாலைக்கு வந்து மாலை வீடு திரும்பும் போதே, மேற்படி அனர்த்தம் ஏற்பட்டது.
தோட்டத் தொழில் துறையில் தொழிலாளர்களாக மாணவியின் பெற்றோர் ஈடுபட்டிருந்த போதிலும், தனது மகளை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், பெற்றோர் எதிர்ப்பார்த்திருந்தனர்.
தமது வறுமை நிலையையும் அம் மாணவி அறியாத வகையில் பெற்றோர் தனது மகள் கல்வியில் உயர வேண்டுமென்ற ஒரே குறிக்கோளில் செயல்பட்டு வந்தனரென்றும், அம் மாணவி மீது எந்தவொரு தவறையும் தாம் காணவில்லையென்றும், அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பேசி, அனைவரது ஆதரவையும் பெற்று வந்தவரென்றும் தோட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தவிடு பொடியாகி, செய்தி கேட்டு, பதைபதைத்து ஓடி வந்து மகளின் சடலத்தைக் கண்டு மயங்கி விழுந்தனர். அதோடு ஸ்தல விசாரணையின் போது, அங்கு கூடிய மக்கள், இம் மாணவியை கொடூரமாகக் கொலை செய்த பாதகனை உடனடியாகக் கைது செய்து, பகிரங்க தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோஷமிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரதேச மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது