இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம் (22-03-2024) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதம் ஒன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், 3 மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஓரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.