தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்ததுடன், பிள்ளைகள் உயிரிழந்து விட்டதாக கருதி தந்தை, தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் தந்தை, கொட்டனால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் முன்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டி அங்கு வந்துள்ளார். இதன்போது குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் இருப்பதை அவதானித்து. அயலவர்களின் உதவியுடன், அவர்களை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இரண்டு பிள்ளைகளின் நிலைமை மோசமடைந்ததால், அவர்கள் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகளை கொல்லும் நோக்கத்துடன் தாக்கிய தந்தை, அவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என நினத்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். அவர் முன்னாள் இராணுவச்சிப்பாய் எனவும் கூறியுள்ளனர்.
அவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு, பொருளாதார பிரச்சனைகளால் அவர் மிகுந்த சோகத்தில் இருந்துள்ள நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரி மாய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.