அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐ.யின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கான பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க் கள அலுவலகத்தில் உளவுத்துறைக்கு பொறுப்பான சிறப்பு முகவராக இருந்த சார்லஸ் மெக்கோனிகல் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவருடனான உறவுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தமது பணியில் இருந்து 2018 இல் ஓய்வு பெற்றார். சில அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, ரஷ்யரான விளாடிஸ்லாவ் டோரோனினுக்குச் சொந்தமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் சங்கிலியான அமான் ரிசார்ட்ஸ், 2022 வசந்த காலத்தில் மெக்கோனிகலை வேலைக்கு அமர்த்தியது.
உலகெங்கிலும் உள்ள அமானின் 34 இடங்களுக்கான பாதுகாப்பு இயக்குநராக அவர் பணிக்கு அமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.