கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (28) அரசங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடத்திற்கு வரும் போது இந்த நாடு இருந்த நிலை பொருளாதார பிரச்சனை, நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை எனப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
அந்த சவால்களை வெற்றிக்கொண்டு இந்த 10 மாதங்களாக நாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் உங்களுக்கு தெரியும். குறிப்பாக நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீதியை நிலைநாட்டுவதில் இருந்த சிக்கல்கள் தொடர்பிலும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.

