இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் தீர்வு முன்வைத்த போதும், நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ அதனை அலட்சியம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளிலேயே டொலர்களை செலுத்தி, அதற்கான வரியை டொலரிலேயே செலுத்தும் வேலைத்திட்டம் ஆளுநர் அஜித் நிவாட் கபரால் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எனினும் அவர் முன்வைத்த யோசனைக்கு நிதி அமைச்சிடம் இருந்து இதுவரையில் உரிய பதில் ஒன்று கிடைக்கவிலை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான பிரேரணை நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள வாகன இறக்குமதி நெருக்கடிக்கும் டொலர் பிரச்சினைக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள வாகன இறக்குமதியாளர்களும் இது தொடர்பில் சாதகமாக பதிலளித்துள்ளதுடன் அதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.