தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே நாட்டிற்கு பெரும் சவாலாகியுள்ளது. அடுத்த மாதம் ஆகுகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றின் வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உண்மையாகவே நாட்டில் இன்று அரசியல் மற்றும் பொருளாதாரம் என இரு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவை இரண்டுமே இன்று ஒன்றாகி அரசியல் மற்றும் பொருளாதார கலவை நெருக்கடியாகியுள்ளன.
இதன் ஆரம்ப புள்ளியாக பொருளாதார நெருக்கடியே உள்ளது. இதன் தாக்கம் இன்று பெரும் எதிர்ப்பு அலையாக மாறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாகியுள்ளது.
அதேபோன்று இந்த எதிர்ப்பு அலையின் அடுத்த நிலையாக முழு அரசாங்கத்திற்கு எதிரானதாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறானதொரு அரசியல் – பொருளாதார நெருக்கடியை இலங்கை இதற்கு முன்பு எதிர்க்கொள்ள வில்லை.
தற்போதுள்ள இந்த இரு நெருக்கடிகளுமே விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகின்றது. ஏனெனில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே நாட்டிற்கு பெரும் சவாலாகியுள்ளது.
அடுத்த மாதம் ஆகுகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையும். எனவே இந்த சவாலை வெற்றிக்கொள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
ஏனெனில் அரசாங்கம் ஒன்று இருந்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும். யார் அரசாங்கம்? எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது? என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகின்றது என குறிப்பிட்டுள்ளார்.