எதிர்காலத்தில் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியாவின் EXIM வங்கி இலங்கையிடம் ஒரு அடமானம் வைப்பதற்கு பொருளை கேட்கும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில மாதங்களில் இந்தியா 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய இந்திய கடனின் கீழ் உள்ள கடைசி எரிபொருள் கப்பல் நேற்றைய தினம் 40,000 டன் டீசலுடன் கொழும்பை வந்தடைந்தது.
இதேவேளை, 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றொரு இந்தியக் கடனைப் பெற இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருந்தாலும், இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் அடமானம் வைப்பதற்கு பொருளை கோரலாம் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 40,000 டன் பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பலை விரைவில் கொழும்பு துறைமுகத்திற்கு வரவழைக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எரிபொருளை ஏற்றிச் செல்லும் பல கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.