இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் கடன் வழங்குனர்களுடனான கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்தச் சந்திப்பில், இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு மற்ற கடன் வழங்கும் நாடுகளும் செயலில் பங்கு வகிக்குமாறு ஜப்பான் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்தார்.
அப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆதரவளிக்குமாறு ஜப்பான் பிரதமர் Fumio Kishida விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன