இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படதயார் என சீனா தெரிவித்துள்ளது. இதனை சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் பெரும் முயற்சிகளை பாராட்டியுள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இந்தியா சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயார் என தெரிவித்தார்.
இந்த விடயத்தில் இந்தியாவின் பெரும் முயற்சிகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,நாங்கள் அதனை அங்கீகரித்துள்ளோம்,நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை உட்பட ஏனைய நாடுகள் அந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைக்கு இந்தியா இந்த வருடம் வழங்கியுள்ள 3.5 பில்லியன் டொலர் உதவியை சீனா பாராட்டியுள்ளது. இலங்கையில் இரண்டு வல்லரசுகளும் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையின் வடபகுதி யாழ்குடாநாட்டில் சீனா முன்னெடுக்கவிருந்த புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை இலங்கை இந்தியாவிற்கு வழங்கியமை குறித்து சீனா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் கேள்விப்பத்திர முறை மூலம் பெறப்பட்ட திட்டமொன்றை இடைநிறுத்துவது இலங்கை குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கு சிறந்த செய்தியை வழங்காது என கொழும்பிற்கான சீனா தூதுவர் தெரிவித்திருந்தார்