விசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் புதிய விசா முறைமை நடைமுறைப்படுத்தப்படும்.
அதற்கமைய விசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், விசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் புதிய வீசா முறைமை நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கு முன்னர் நாட்டுக்கு வந்த பின்னரே வீசா பெறும் முறைமை காணப்பட்டது. எனினும் புதிய முறைமையின் கீழ் எந்தவொரு நாட்டிலிருந்து கொண்டும் தமக்கு தேவையான காலப்பகுதிக்கு ஏற்ப சுற்றுலா விசாவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் நாட்களில் நிரந்தர விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
விசா முறைமைகளை இலக்குவாக்குதல் குறித்து சுமார் 145 நாடுகளை இணைத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செல்லும் பயணிகளை விரல் ரேகை மற்றும் முகம் என்பவற்றைக் கொண்டு அடையாளங்காண்பதற்கான தொழிநுட்ப வசதிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. விமான நிலைய பொலிஸாருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா மாவட்ட அலுவலகத்தில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
பெப்ரவரிக்குள் குறித்த அலுவலகம் திறக்கப்படும். காங்கேசன்துறையிலிருந்து படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தின் ஊடாக சகல சேவைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.