இரு குழந்தைகளின் தந்தையை கடந்த 28ஆம் திகதி முதலை பிடித்து இழுத்து சென்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அக்குரஸ்ஸ பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் யு.ஜி. சம்பத் அந்த துர்ப்பாக்கிய சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
”நில்வலா ஆற்றில் முதலை ஒன்று இரு பிள்ளைகளின் தந்தையின் உயிரை பறித்துள்ளது. அருகில் உள்ளவர்கள் எவ்வளவு முயன்றும் முதலையின் பிடியிலிருந்து தந்தையை காப்பாற்ற முடியவில்லை.
நில்வலா ஆற்றில் காலை நேரங்களில் முதலைகள் அடிக்கடி சுற்றித் திரிவதாகவும், முதலைகள் சுமார் 12-15 அடி நீளமுள்ளதாக இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் . தந்தையின் உடல் எச்சங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றன” என்றார் .
நில்வலா ஆற்றில் முதலையால் கொல்லப்பட்ட தந்தை பழனி ஆறுமுகம் (வயது 37). அவரது குழந்தைகளான ஆறுமுகம் தினிதி மதுவந்தி மற்றும் ஆறுமுகம் இமேஷா ராணி ஆகிய இரு மகள்கள் இன்று நிர்க்கதியாக நிற்கின்றனர்
வாழும் போது, இந்த தந்தை குழந்தைகளை தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக இருந்து பார்த்துக் கொண்டார் .அத்தகைய தந்தையின் மரணத்தைத் தாங்குவது பிள்ளைகளுக்கு மிகக் கடினமாக இருந்தது.
தாயும் தந்தையும் இல்லாவிட்டாலும் இச்சிறுமிகளை சமூகம் கைவிடவில்லை இச்சிறுவர்களுக்கான எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அக்குரஸ்ஸ பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் ‘சுரகிமு அக்குராசி மல் கெகுலு’ அமைப்பின் ஊடாக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
சிறுமிகளின் பாட்டி தன்னால் முடிந்ததை தேடி சமைத்து அவர்களுக்கு உணவளிக்கிறார். பாடசாலைக்கும் அனுப்புகிறார்.
இந்த குழந்தைகள் பெற்றோரின் அன்பையும் பாசத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் நாளை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. பெற்றோர் இருவரும் இல்லை. இந்தக் குழந்தைகளுக்கு உணவு இல்லாமல் இருக்கும் போது, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உணவு கொடுக்கிறார்கள் என்கின்றனர் அப்பிரதேசவாசிகள் .
‘இறந்த நபருடன் 10 வார்த்தைகள் பேசினால், அதில் எட்டு வார்த்தைகள் இந்தக் குழந்தைகளைப் பற்றியதாக இருக்கும். இப்போது அந்தக் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை. அவர்கள் பாடசாலைக்கு சென்றார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. குறித்த தந்தை தம் குழந்தைகளைப் பற்றி எப்போதும் என்னிடம் பேசுவார்.. என அப்பகுதிவாசியொருவர் நினைவு கூருகிறார்.
குறித்த தந்தை மீது உங்களுக்கு அன்பு இருந்தால், அவருடைய குழந்தைகளுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என்று அவர் இறுதியாகக் கேட்டுக் கொண்டார்.
இக்குழந்தைகளுக்கு அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் திருமதி. கே.ஜி.டி. அனோஜா உதவிகளை வழங்குவதுடன் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுத்துள்ளார். சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாப்பு தற்போது சிறுமிகளின் சித்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த குழந்தைகளுக்கு உதவ பலர் உறுதியளித்துள்ளனர் . இதற்காக அக்குரஸ்ஸ ஹுலந்தாவ தேவாலயத் தந்தை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நன்னடத்தை உத்தியோகத்தர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இணைந்து செயற்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் ஒரு அமைப்பை உருவாக்கி இந்த குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது.
அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (தலைவர்), ஹெனகம கனிஷ்ட கல்லூரி அதிபர் (செயலாளர்), அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் (பொருளாளர்) மற்றும் 15 அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இந்த அமைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த குழந்தைகளுக்கு உதவ திட்டமிடல் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை விட்டுச் சென்றாலும், தந்தை அவர்களுக்கு பாசத்தைக் கொடுத்தார். அந்த அன்பும் இப்போது இழக்கப்பட்டுள்ளது. தந்தை ஹீரோ, குழந்தைகளின் பாதுகாவலர். அந்த இடைவெளியை யாராலும் நிரப்ப முடியாது.
தாயின் குறையை நிரப்பியவர் தந்தை. அன்றாடக் கூலி வேலை செய்தாலும் , பல பற்றாக்குறைகளுக்கு மத்தியில் குழந்தைகள் பாடசாலைக்கு அனுப்பப்பட்டனர். தன் பிள்ளைகளுக்குத் தன்னால் இயன்ற அளவு உழைத்தார். தனது குழந்தைகளுக்கு உணவளிக்க சம்பாதித்தார். ஆனால் இன்று அந்த தந்தை இல்லை.