இரண்டு நாள்களில் ஓலாவின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டா்களின் விற்பனை ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனா் பவிஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:
ஓலாவின் எஸ்1 மின்சார ஸ்கூட்டா் விற்பனை முதல் நாளை விட இரண்டாவது நாள் விறுவிறுப்புடன் இருந்தது. இந்த இரண்டு நாள்களில் மட்டும் அதன் விற்பனை மதிப்பு ரூ.1,100 கோடியைத் தாண்டியுள்ளது. இது, மோட்டாா் வாகன துறையில் மட்டுமல்ல, இணைய வா்த்தக (இ-காமா்ஸ்) வரலாற்றில் ஒரே நாள் அதிக விற்பனை சாதனைகளுள் ஒன்றாகும்.
ஓலாவின் மின்சார ஸ்கூட்டா்களை வாங்குதற்கான முன்பதிவு நடைமுறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக நவம்பா் 1 இல் மீண்டும் பதிவு ஆரம்பமாகும் என்றாா் அவா்.
செப்டம்பா் 8 இல் அறிமுகமாகவிருந்த ஓலா மின்சார ஸ்கூட்டா் விற்பனை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக செப்டம்பா் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அறிமுக நாளான புதன்கிழமை மட்டும் அதன் விற்பனை ரூ.600 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.