இணை பிரியாத இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற நிலையில் , இருவருக்கும் ஒரே நாளில் பிரசவம் ஆன சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர் அம்பிகா தம்பதியின் மகள்களான ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.
இவர்கள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்த நிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து , கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி, ஒரே மேடையில் திருமணம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த ஆஸ்பத்திரியிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர். இதனையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேவேளை அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் மதியம் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அதேநாள் மாலை ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெற்றோர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரது மத்தியிலும் மிக மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.