இலங்கையில் நோய் அறிகுறியற்ற அல்லது அபாயநிலை அற்ற கோவிட் நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் இன்று முதல் செயற்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி நோய் அறிகுறியற்ற அல்லது அபாய நிலை இல்லாத 2 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட கோவிட் நோயாளர்களை வீட்டில் வைத்து வைத்திய கண்காணிப்பு மேற்கொள்ளும் நடவடிக்கையே இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, 1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் நோயாளர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டில் வைத்து கண்காணிக்கப்படும் நோயாளர்களுக்கு கடுமையான நோய் நிலைமை ஏற்படுமாயின் அவர்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
என்ற போதும் நோயாளர்களை வீட்டிலேயே வைத்து கண்காணிப்பதற்கு நோயாளர்களது அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.