கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஞானசார தேரர் இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், நேற்று (3) களுத்துறை தீனியாவள பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு
அத்துடன் மறைந்திருக்கும் முயற்சியாக அவர் தனது சிம் (SIM) அட்டையையும் வாகனத்தையும் மாற்றியிருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் ஞானசார தேரரை கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை பிறப்பித்திருந்தது.
2016 ஜனவரியில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட தொடர்பான வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும் ஞானசார தேரர் 2018 ஓகஸ்ட் 8 அன்று குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அத்தண்டனைகளை ஆறு வருட காலப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு
பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று செப்டெம்பர் 10 அன்று தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு எதிரான தண்டனையை நடைமுறைப்படுத்தாமை குறித்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனு, செப்டெம்பர் 29 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

