இந்நாட்டு விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.
விளையாட்டு, கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூடியதாக மேற்படி குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியைப் பார்வையிட நேற்று (25) மேற்கொண்டிருந்த கண்காணிப்பு விஜயத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனைத்து விளையாட்டுத் துறைகளும் உள்ளடங்கும் வகையில் 100 வீர வீராங்கனைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான வசதிகள் மற்றும் பயிற்சிளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் .
வருடாந்தம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேசத்தை வெற்றிக்கொள்ளக்கூடிய வீர வீராங்கனைகளை ஒரு சில வருடங்களுக்குள்ளேயே இந்நாட்டில் உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேபோல் பிள்ளைகளின் விளையாட்டுத் திறன்களை அவர்களில் 10 – 12 வயது காலத்தில் அறிந்துகொள்ள வேண்டியுள்ளதோடு, அதன்படி அவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
கொழும்பின் பிரதான பாடசாலைகள் உள்ளடங்களாக நாட்டின் 100 பாடசாலைகளில் பேஸ் போல் விளையாட்டினை இவ்வருடத்தில் பிரபல்யப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, பேஸ் போல் விளையாட்டில் ஆசியாவின் பிரதான தளமாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் தாய் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பின்னர் ஓய்வு பெறும் வீர வீராங்கனைகளுக்கு, அந்தத் தகுதிகளை அடிப்படைத் தகைமையாகக் கருதி பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பிரதான விளையாட்டு மைதானம், பேஸ்போல் மைதானம் மற்றும் பயிற்சித் தளத்துக்குச் சென்று அங்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விளையாட்டு வீரர்களின் விபரங்களைக் கேட்டறிந்ததுடன் அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
விளையாட்டு வீர வீராங்கனைகளின் பயிற்சிக்காக உள்ள நீச்சல் தடாகம், கிரிக்கெட் மைதானம், ஓடுதளங்கள் போன்ற பல்வேறு இடங்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றதாக இருக்கின்றமை இதன்போது அவதானிக்கப்பட்டது.
அதற்கிணங்க, முன்னுரிமைப் பட்டியலொன்றைத் தயாரித்து, குறித்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, விளையாட்டுத் தொகுதியைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அதிகாரிகள் பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்து தேவையற்ற செலவுகளை முன்வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததுடன், அவ்வாறு நிதி வழங்க இந்த நேரத்தில் அரசாங்கம் முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மைதானத்தின் பராமரிப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த காலங்களில் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாடுபூராகவும் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடக்கூடிய முழுமையான விளையாட்டுத் தொகுதியாக தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கம், பேணப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , எதிர்காலத்தில் விளையாட்டுப் பட்டப்படிப்பை நிறைவுசெய்யக் கூடிய ஒரு விளையாட்டு பல்கலைக்கழகமாக அதனை உருவாக்கும் இலக்கிற்கு அமைவாக செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டுத் தொகுதியின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, விளையாட்டு தொகுதியின் தற்போதைய நிலை மற்றும் தேவைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பசிது குணரத்ன, விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.