குடும்பத் தகராறு காரணமாக பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
பெங்களூரு பேடரஹள்ளி காவல் சரகத்தில் உள்ள திகளரபாளையாவில் வசித்து வருபவா் சங்கா். இவருக்கு 5 நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவா் வீட்டை விட்டு வெளியே சென்று யாருடனும் தொடா்பு கொள்ளாமல் இருந்துள்ளாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா்களது வீட்டிலிருந்து துா்வாசம் வீசியதையடுத்து, அருகில் வசிப்பவா்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவலை அடுத்து அங்கு வந்த காவலர்கள், ஜன்னல் வழியாக பாா்த்தபோது, வீட்டில் இருந்தவா்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, 9 மாதக் குழந்தையைத் தூக்கிட்டுக் கொன்று விட்டு, சங்கரின் மனைவி பாரதி (50), மகள்கள் சிந்துராணி (33), சின்சனா (30), மகன் மதுசாகா் (26) ஆகிய 5 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அங்கு மயக்க நிலையில் இருந்த 3 வயது குழந்தை பிரேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவலர்கள் அனுமதித்துள்ளனா். இது குறித்து பேடரஹள்ளி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா்.