யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் குடும்பஸ்தர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்
அப்போது , பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் கணவன் மனைவி இருவரையும் வாகனத்தில் கடத்தி சென்றனர்.
கணவனை ஒரு வாகனத்திலும், மற்றைய வாகனத்தில் மனைவியையும் கடத்தி சென்ற வன்முறை கும்பல், மனைவியை அராலி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.
கணவனை கடத்தி சென்றவர்கள், வாகனத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் மேற்கொன்டதுடன், வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு, வட்டுக்கோட்டை வைத்தியசாலை ஒன்றின் முன்பாக இளைஞனை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இளைஞனை மீட்ட வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அராலி பகுதியில் இறக்கி விடப்பட்ட மனைவி அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னையும் , தனது கணவரையும் இரு வாகனங்களில் கடத்தி சென்றனர் என முறைப்பாடு செய்துள்ளார்.