கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன.
இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கிறார்கள் நாமக்கல் மாவட்டத்தில் பெரியகோம்பை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
இங்கு ஒன்றிரண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டால் கூட பரவாயில்லை. ஒரே மரத்தில் இருபத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரியகோம்பை என்ற கிராமம். இந்த கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்குச் சென்றபோது பி.எஸ்.என்.எல் மொபைல் சிக்னல் மட்டுமே கிடைத்தது. இதர மொபைல் சிக்னல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு பாயின்ட்கள் மட்டுமே கிடைத்தன.
இதனால் மாணவர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில், கொஞ்சம் உயரமாக அமைந்துள்ள பகுதிக்கு சாரை சாரையாகப் படையெடுக்கின்றனர். அவர்கள் பின்னாலேயே நாமும் சென்றோம். நீரோடைகள் எல்லாம் கடந்து அரை கிலோ மீட்டர் பயணம் செய்தோம்.
வெட்டவெளி முடிந்து காடு தொடங்கும் பகுதியில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் அருகே கள்ளி முள் செடிகளும் இதர முள் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன.
எந்தவிதமான பயமும் இன்றி மாணவர்களும், மாணவிகளும் ஆலமரத்தின் கிளைகளில் ஏறுகின்றனர். பின்னர், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கிளைகளில் அமர்ந்துகொண்டு மொபைல் போன் வழியாக ஆன்லைன் வகுப்பை கவனிக்கின்றனர். ஆலமரத்தின் அடியில் பிஎஸ்என்எல் சிக்னல் மூன்று பாயின்ட்களுக்கு மேல் கிடைத்தன.
ஆலமரத்தில் ஆன்லைன் வகுப்பு கவனிக்கும் கல்லூரி மாணவி துர்காவிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம். “ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பயோடெக்னாலஜி முதலாண்டு படிக்கிறேன். கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து கொரோனா ஊரடங்கு என்பதால் ஆன்லைன் வகுப்புகள்தான் நடக்கின்றன. எங்கள் பகுதியில் மொபைல் சிக்னல் சரியாக கிடைக்காதது காற்று பலமாக அடித்ததால் ஒன்றிரண்டு பாயிண்ட்கள் கிடைக்கும்.
அதை வைத்துக்கொண்டு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவோ அல்லது குறிப்புகளை டவுன்லோடு செய்யவோ முடியாது. எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதி கொஞ்சம் மேடாக உள்ளது. இந்த ஆலமரத்துக்குப் பக்கத்தில் சென்றால் மொபைல் சிக்னல் கூடுதலாகக் கிடைக்கும்.
ஆலமரத்தின் மீது ஏறினால் ஓரளவுக்கு சிக்னல் கிடைக்கவே கடந்த ஓராண்டாக ஆலமரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனித்து வருகிறேன். என்னுடன் என் தங்கையும், பிற நண்பர்களும் என்னுடன் வருகிறார்கள். மழைக்காலம் என்றால் ஆலமரத்துக்கு அருகில் செல்ல முடியாது,” என்றார்.
எம்.காம் படித்து முடித்து விட்டு தற்போது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மணியரசன், “எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு என்பதால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியாது. எங்கள் ஊரில் சரியாக மொபைல் சிக்னல் கிடைக்காததால் எங்கு மொபைல் சிக்னல் கிடைக்கிறதோ அங்குச் சென்று தான் பேசுவோம். ஆன்லைன் பயன்படுத்தும் அளவுக்கு மொபைல் சிக்னல் இருப்பதில்லை.
இதனால் ஆலமரத்தின் மீது அமர்ந்துதான் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை. ஒருவருக்குக் கிடைக்கும் சிக்னலை வைத்து ஹாட்ஸ்பாட் போட்டு மற்றவர்களும் பயன்படுத்தி வருகிறோம். காலையிலேயே பகலுக்கான உணவை எடுத்துக்கொண்டு வந்து இங்கேயே சாப்பிட்டு விட்டு மாலை வரை வகுப்புகளைக் கவனிக்கிறோம். ஆலமரம்தான் எங்களுக்கு போதி மரம் மாதிரி இருக்கிறது. எங்களுக்கு மொபைல் டவர் அமைத்துக்கொடுத்தால் எங்கள் கல்விக்கு உதவியாக இருக்கும்,” என்றார்.
இரண்டாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் பிரவீன் என்ற மாணவர், “எங்களுக்கு போன் இருக்கும். சிம் இருக்கும். ஆனால் மொபைல் சிக்னல் கிடைக்காது. இதனால் பல நேரம் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடிவதில்லை. வீடுகள் தள்ளித்தள்ளியே இருக்கின்றன. சிக்னல் ஓரளவுக்குக் கிடைக்கும் இடம் என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலமரத்து உச்சிதான். அதனால் இங்கு வந்து தான் படிக்க வேண்டி இருக்கிறது,” என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த பெருமாள், “எங்கள் பகுதியிலிருந்து முள்ளுக்குறிச்சி என்ற பகுதி எட்டு கிலோ மீட்டர் தொலைவில்இருக்கிறது. அதன் பக்கத்தில்தான் பி.எஸ்.என்.எல் டவர் இருக்கிறது. எங்கள் பகுதி கொஞ்சம் பள்ளமாக இருப்பதால் சரியாக சிக்னல் கிடைப்பதில்லை. இங்கு மொபைல் சிக்னல் கிடைக்காததால் அவசரத்துக்கு 108க்கு கூட அழைக்க முடிவதில்லை. சொந்தக்காரர்களுக்கு ஏதாவது தகவல் சொல்லலாம் என்றாலும் சொல்ல முடிவதில்லை. இப்போது பிள்ளைக்கு ஆன்லைன் கிளாஸ் எடுக்கிறார்கள்.
ஆனால், சிக்னல் கிடைக்காததால் உயரமான மேட்டுப் பகுதிக்குத்தான் செல்லும்போதுதான் ஒன்றிரண்டு பாயிண்ட் சிக்னல் கிடைக்கிறது என்று ஆலமரத்துக்கு மேலே ஏறி படிக்கிறார்கள்.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோவென்று ஒரு பயம் இருந்துகொண்டு இருக்கிறது. அரசு எங்களுக்கு மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்,” என்றார்.