மேல் மாகாணத்தில் கோவிட் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முடக்க நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம், இலங்கை மருத்துவ சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இலங்கை மருத்தவ சபையினால் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளும் சாதாரண வார்ட்களிலும் கொவிட் தொற்றாளர்கள் நிறைந்து காணப்படும் சூழலில் கொவிட் தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கு பொருத்தமான மருத்துவ வசதிகள் குறைந்த மட்டத்தில் உள்ளதென இலங்கை மருத்துவ சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, தற்போது வேகமாக கொவிட் வைரஸ் பரவுவதற்கு டெல்டா மாறுபாடு காரணமாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
தற்போது மேல் மாகாணத்தினுள் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு மிகவும் சிறிய காலப்பகுதியினுள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவும் அபாயம் உள்ளதென சங்கத்தின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் கூடுவதனை தவிர்த்தல், உரிய முறையில் முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்தி கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஊடாகவே வைரஸ் பரவலை குறைத்துக் கொள்ள முடியும் என இலங்கை மருத்துவ சபை குறிப்பிட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுபாடுகளை நீக்குதல், சமூக நிகழ்வு இடங்களை திறந்து வைத்தல், பொது போக்குவரத்தில் சுகாதார தன்மை, மத ஸ்தலங்களை திறந்து வைத்தல் மற்றும் அலுவலகங்களை வழமையை போன்று நடத்தி செல்தல் போன்ற விடங்கள் ஊடாகவே தற்போதைய கொவிட் பரவலுக்கு முக்கிய காரணமாகியுள்ளதென இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றிற்கு மத்தியில் முன்வரியில் உள்ள சுகாதார பிரிவு உறுப்பினர்கள் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க செல்லும் போது தொற்றாளர்களாகின்றார்கள். இதனால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவும் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் சுகாதார பிரிவுகளின் செயற்பாடுகளை கட்டுப்பாடுடன் நடத்தி செல்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை கூடிய விலையில் மேற்கொள்ளுமாறு இலங்கை மருத்துவ சபை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.