ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் தகாத புகைப்படங்களை பெற்று பணம் பறித்து வந்த இருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் ஒருவர் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும், மற்றையவர் திருமணமான ஆண் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, இருவருரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண் ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு மிரட்டி , பணத்தை குறிப்பிட்டதொரு இடத்தில் வைக்கச் சொல்லி அதனை எடுப்பதற்கு முயற்சித்த போதே, மறைந்திருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் அகப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் , ஏற்கனவே இந்தப் பெண் தரப்பிடம் ஆறு லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை இழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தரியவருகையில், தனது முகத்தை கடைசி வரை காண்பிக்காமல் தொலைபேசி மூலம் ஆண்களைத் தொடர்புகொண்டுள்ள மேற்படி பெண், அவர்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ அழைப்பில் அவர்களின் தகாத புகைப்படங்களை பதிவு செய்து கொண்ட பின்னர் அந்தப் படங்களை வைத்து, மிரட்டி பெருந்தொகைப் பணம் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, கைதான பெண்ணிடமிருந்து பொலிஸார் கைப்பற்றிய தொலைபேசியில், அரச உயர் பதவிகளிலும், பெரும் பதவிகளிலும் உள்ள சிலரின் தகாத புகைப் படங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில், இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
அம்பாறை மாவட்டம் – ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கட்டார் சிற்றி’ எனும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இந்த மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மாமா, மருமகள் உறவுடையவர்கள் என்றும், இருவரும் கணவன் – மனைவி போல் நடித்து, இந்த மோசடி வேலையை புரிந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர்களின் மோசடியில் சிக்கி, ஏற்கனவே 06 லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்த ஒருவர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடைப்படையில் பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.
இந்தப் பின்னணியில், நேற்று முன்தினம் இரவு, அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் ஆறு பவுண் நகையினையும் மேற்படி பெண்ணிடம் இழந்ததாகக் கூறி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது,
மேலும் மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு ஆண்களை ஆபாச வலையில் சிக்க வைத்து, பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது