சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து குறித்த அதிகாரி இடம்மாற்றம் செய்யப்பட்டிருந்தார். வீதியிலும், பொலிஸ் நிலையத்திலும் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சித் தகவல்களை பிரபல சட்ட நிறுவனமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
சாரதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் கோருவதாக ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு சாரதியை வீதியில் தாக்கியமை, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளில் வெளியாகியதையடுத்து, இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் , கிரியெல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது கட்சிக்காரர், ஒரு அறைக்குள், நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதுடன் இரு அதிகாரிகள் முன்னிலையில் சாரதியை சிரேஷ்ட டிஐஜி தாக்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமது கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆடையின்றி குறித்த சாரதியை புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.