நாடு முழுவும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியாகும்போது முடிவு காணப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (24) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடு முழுவதுமாக 40ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
அதனால் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், பட்டதாரிகள் 22ஆயிரம் பேரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு 9 மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு கடந்த வாரமே அது முடிவுக்கு வந்தது.
அடுத்த வாரமாகும்போது நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோன்று 13, 500பேரை இணைத்துக்கொள்வதற்காக மாகாணசபைகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.
அதுதொடர்பில் நீதிமன்றில் ரிட்மனு இருக்கின்றது . நேற்று புதன்கிழமை அந்த ரிட்மனு தொடர்பான உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.
அந்த உத்தரவு கிடைக்கப்பெற்றால் பெரும்பான்மையான ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
மேலும் 5500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பரீட்சை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பெப்ரவரி மாதம் இறுதியாகும்போது ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு முடிவு காணப்படும் என்றார்.