ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான ஒரு லட்சம் ஏக்கர் காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கையொன்றை கோருவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார்.
ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான சுமார் 200 காணிகள் முறையற்ற விதத்தில் குத்தகைக்கு வழங்கியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளமை தொடர்பில் தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, ஒரு மாத காலப் பகுதியில் விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையிலான முழு அதிகாரமுடைய குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நல்லாட்சி காலப் பகுதியில் அரசியல் நட்புக்கான சில காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில அரசியல்வாதிகள் இந்த காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவற்றில், காணிகள் மாத்திரமன்றி, தேயிலை தொழிற்சாலைகளும் அடங்குவதாக அவர் கூறுகின்றார்.
அதுமாத்திரமன்றி, தேயிலை காணிகள் உள்ளிட்ட பல காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் ஊடாக வருடாந்தம் சுமார் 40,000 ரூபாவிற்கும் குறைவான வருமான வரியே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனால், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான நிதி, கிடைக்காது போயுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, முழுமையான அதிகாரம் கொண்ட குழுவொன்றை நியமித்து, ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தான் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜே.எம்.உதித் கே ஜயசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, அதனூடாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.