அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் பங்கேற்றிருந்த வவுனியாவை சேர்ந்த இளைஞனே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
அகதி முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குடிவரவு சட்டத்திற்கு அமைய நாடு கடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை முன்னெடுத்து வருவதாக உள்துறை அமைச்சை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.