நாடளாவிய ரீதியில் ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 2000 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பதவி உயர்வு தொடர்ந்தும் தெரிவிக்கையில், பயனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
மேலும், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடவும் ஊக்குவித்து வருகின்றோம்.
வெளிநாட்டுச் சந்தையை இலக்காக கொண்டு, முக்கியமாக தேயிலை, கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொழில்முனைவு நிதியம் ஒன்றை ஆரம்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேம்படுத்தப்பட வேண்டும்.
அதன்படி, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் சுமார் 25,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் சேவையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களில் சுமார் 2000 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை நலன்புரிப் பணிகளுக்காக மாத்திரம் செயற்படும் நிறுவனமாக இல்லாமல் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நிறுவனமாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.
அதேபோன்று, இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிக்கு உட்படுத்துவதற்கு சீனாவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.