அரசு தனது பலவீனத்தை மறைக்க, பாராளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்ற அமர்வை பகிஸ்கரித்து, பாராளுமன்ற முற்றத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டில் மின்சார தடை அதிகரித்துள்ளது, சமையல் எரி வாயு தட்டுப்பாடு, மசகு எண்ணெய் இல்லை, மண்ணென்னை பற்றாகுறை, மக்கள் கோபத்தில் கொந்தளித்து போய் உள்ளனர் அரசு தனது பலவீனத்தை மறைக்க பாராளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது.
நாட்டின் ஜனநாயகத்தின் உயரிய தளம் பாராளுமன்றம். அங்கே மக்களது பிரச்சினைகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான பூரண வாய்ப்பு காணப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் பூரணமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வசதியை சபாநாயகர் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களால் மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அரச தரப்பின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக உள்ளது. இச்சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் அதனது பங்காளி கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறி பாராளுமன்ற அமர்வை பகீரஸ்கரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று அரசில் உள்ள அமைச்சர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது தேர்தல் தொகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. கிராமத்திற்கு, நகரத்திற்கு சென்று மக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் அரச தரப்பு உறுப்பினர்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளனர். தமது விரக்த்தியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப்பார்க்கின்றனர். நாம் கேட்பது, உங்களால் முடியுமாக இருந்தால் மக்களிடம் செல்லுங்கள். மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை கூறுங்கள். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வையுங்கள். அதனை விடுத்து அடிதடியினால் தீர்வுகளை எட்ட முடியாது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதற்கான சூழ்நிலையை சபாநாயகர் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக உறுப்பினர்களுக்கு காணப்படும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதுவே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதை கொண்டுவந்து தரும்.
அதே போல, சர்வதேசத்திற்கு எமது நாட்டை பற்றிய சரியான செய்தியை பெற்றுக்கொடுக்கும். அதனை விடுத்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்து சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கி பிரச்சினைகளை மூடி மறைத்து இந்த அரசங்கத்தை முன்கொண்டுசெல்ல முடியும் என நினைப்பது வெறும் சிறுபிள்ளைத்தனமான செயலாகும் என மேலும் தெரிவித்தார்.