விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரியும், எரிபொருள் உட்பட பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் , ஊழலை நிறுத்தக் கோரியும் புத்தளம் நகரில் இன்று (24) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம், கற்பிட்டி, வண்னாத்திவில்லு, கருவலகஸ்வௌ, ஆனமடுவ, முந்தல், மதுரங்குளி, உடப்பு, நுரைச்சோலை, தளுவ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்லியாஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், இனோக் துஷார பத்திரன , கிங்ஸ்லி லால் பர்னார்ந்து உட்பட புத்தளம் நகர சபை, புத்தளம், கற்பிட்டி மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் கேஸ் சிலின்டர்களையும் கையில் ஏந்திக்கொண்டு புத்தளம் – மன்னார் வீதியிலுள்ள முத்துமாரி அம்மன் கோயிலுக்கு முன்னால் இருந்து மாட்டு வண்டி மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் புத்தளம் – கொழும்பு முகத்திடல் வரை ஊர்வலமாக சென்றது.
இதனையடுத்து புத்தளம் – கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
புத்தளத்தில் உள்ள அதிகளவிலான விவசாயிகள் ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தை பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் நிலையில், தமது விவசாயத்திற்கு உரம் மற்றும் கிருமி நாசினி இல்லாமல் தாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
´ராஜபக்ச அரசே நாட்டை சுரண்டியது போதும், விவசாயிகளின் வயிற்றில்அடிக்காதே´, ´பெண்களின் பொருளாதார சுமையை இறக்கி வை´, ´ஆட்சி செய்ய முடியாவிட்டால் வீட்டுக்கு போங்கள்´, ´அரசியல் கைதிகளை விடுதலை செய்´, ´எரிவாயு விலையை உயர்த்தாதே´, ´பெண்களின் பொருளாதார சுமையை இறக்கி வை´, ´அடித்தாய் அடித்தாய் வயிற்றில் அடித்தாய். பொதுமக்களின் வயிற்றிலேயே அடித்தாய்´, ´விவசாயிகளின் வயிற்றில் அடித்து நாட்டை அழிக்காதே´ இதுபோன்ற மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் கொடும்பாவியும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது புத்தளம் – மன்னார் வீதி, புத்தளம் – கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டதுடன், வாகன போக்குவரத்துக்களும்p சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
அத்துடன், புத்தளம் தலைமையக பொலிஸார் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.