அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தேவையோ அல்லது மக்களைத் துன்புறுத்தும் நோக்கமோ தமக்குக் கிடையாது எனவும், மாறாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான மஹிந்த அமரவீர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த அமரவீர, தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுத்ததுடன், போராட்டங்களை அடக்காமல் அவற்றுக்குச் செவிசாய்க்குமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு பாரதூரமான நிலையை எட்டியுள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்.
திருகோணமலைச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பௌத்த பிக்குகள் கைது செய்யப்படுவது குறித்துப் பௌத்த மக்கள் கவலையடைந்துள்ளதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், வெறும் விளம்பரங்களை மட்டும் செய்யாமல் விவசாயிகளுக்கு முறையான நட்டஈட்டை வழங்க அரசு முன்வர வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய துமிந்த திஸாநாயக்க, ஜே.வி.பி தனது பெயரை ‘திசைகாட்டி’ என மாற்றிக்கொண்டு மக்களை ஏமாற்றி அதிகாரத்தைப் பெற்றுள்ளதே தவிர, இதுவரை புதிய அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
தற்போதும் கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களே பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுகட்ட எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இழப்பீட்டுக் காசோலைகள் வங்கிகளில் பணம் இன்றித் திரும்புவது (Return) கவலைக்குரிய விடயமாகும்.
முறையான அமைச்சரவை அங்கீகாரமின்றி ஒரு கட்சியின் தேவைக்காகக் கல்வியை மாற்றியமைக்கக் கூடாது எனவும், வளர்ந்த நாடுகளைப் பின்பற்றி சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதை தாம் வரவேற்கின்றோம்.
அரசியல் பழிவாங்கல்களைக் கைவிட்டு, நாட்டை முன்னேற்றத் தேவையான ஆலோசனைகளை எம்மிடம் பெற்றுக்கொள்ள முன்வருமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

