அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்து நபர்களை கடித்த பூனை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றில் வளர்க்கப்பட்ட குறித்த பூனை ஐந்து பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் மேலதிக பரிசோதனைக்காக அப்பூனையின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேபோன்று அண்மையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் பல பேரை கட்டாக்காலி நாய் கடித்துள்ளது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

