அம்பாறை – பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (14-03-2024) காலை 8 மணியளவில் குறித்த இரட்டை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் மனைவியின் இழப்பின் பின்னர் தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த தந்தையான 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவருக்கு வாழ்க்கையில் விரக்தி வந்திருக்கும் நிலை அவரது சமீப கால செயற்பாட்டில் உணர முடிகின்றது.
அதாவது தனது மனைவியின் நோய் கால கட்டத்தில் அவரை பராமரிக்க மற்றும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு ஒரு சிற்றூர்தியை கொள்வனவு செய்திருந்தார்.
இந்த சிற்றூர்தியை சம்பவ தினத்திற்கு முன்னர் மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்திருந்ததாகவும் மறுமணம் செய்வதற்கு ஆர்வமாக அவர் இருந்த போதிலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளை சுட்டிக்காட்டி தடைபட்டுள்ளதாகவும், குறித்த நபர் அமைதியான மென்மையான போக்குள்ள அமைதியான ஒரு மனிதன் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை விட தந்தையினால் கொல்லப்பட்ட இரு பிள்ளைகளும் அப்பகுதியில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளை அனுமதிக்கும் ஹியூமன் லிங்க் பாடசாலைக்கு கல்வி கற்பதற்கு சேர்ந்திருந்தனர்.
இருந்த போதிலும் அவரது மனைவியின் இறப்பின் பின்னர் அப்பிள்ளைகளை அப்பாடசாலைக்கு அனுப்புவதை இடை நிறுத்தி கொண்டார் என்ற மற்றுமொரு தகவலும் வெளியாகி இருந்தது.
மேலும் 6 பேர் கொண்ட இக்குடும்பத்தில், படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளை தவிர வெளிநாடுகளில் தொழில் புரியும் ஏனைய இரு பிள்ளைகளும் அண்மையில் மரணமடைந்த தாயின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த விடயமும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான நிலையில் 29 வயது மதிக்கத்தக்க முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் தினமும் அருகில் உள்ள மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா மஸ்ஜிதில் தனது ஐவேளை தொழுகையையும் விடாமல் செய்து இறைபணியை முன்னெடுத்தவர் என்பதுடன், அவர் வழமையாக ஏனைய மக்களோடு இணைந்து செயற்படுபவர் என மக்கள் குறிப்பிட்டனர்.
வீட்டின் படுக்கையில் இருந்த இரு பிள்ளைகளையும் கத்திகளை பயன்படுத்தி கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, சம்பவத்தை கைத்தொலைபேசி ஊடாக தனது சகோதர சகோதரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல்எழுப்பியதுடன் கத்தியோடு தற்கொலைக்கு முயற்சித்திருந்த தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்றனர்.
பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மக்கள் தங்களை அறியாமல் இந்த நோன்பு (ரமழான்) மாதத்தில் இவ்வாறு நடந்து விட்டதே என கதறி அழுது பெரிய நீலாவணை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கினர்.
தடயவியல் பொலிஸாரும் மோப்பநாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இரவு உறவினர்களிடம் இரு சடலங்களும் கையளிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.