பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்தில் ஐராேப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ள திருத்தங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) மழுப்புகின்றார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தது,
நாடாளுமன்ற சபையில் நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) “நீதித்துறை சுயாதீனமானது. அதில் யாரும் செல்வாக்குச் செலுத்துவதில்லை என சபையில் தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்து உண்மை. இருப்பினும், 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றபட்டதன் மூலம் நிறைவேற்று அதிகாரிக்கு, நீதித்துறையில் அதிகாரம் செலுத்த முடியுமாகி இருக்கின்றது.
மறைமுகவாகவே நிறைவேற்று அதிகாரியின் தலையீடு நீதித்துறையில் ஏற்படுகின்றது. அதனால்தான் 20ஆவது திருத்தச் சட்டத்தை அனைவரும் எதிர்க்கின்றனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பது தாெடர்பாக சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஐராேப்பிய நாடுகளில் பேசி வருகின்றனர். முக்கியமான ஷரத்துக்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தப்படவில்லை என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்தை சபைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதன்போது ஐராேப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் கேட்டபோது அவர் மழுப்பும் வகையில் பதிலளித்தார்.
அதனால் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்போகின்றன என்பதைப் பார்ப்போம். அத்துடன் மனித உரிமைவாதி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்த கருத்தை இலக்குவைத்து வெளிவிவகார அமைச்சு அவருக்கு எதிராகக் கருத்து த் தெரிவித்திருக்கின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிகவும் மாேசமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 22 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்குப் பிணை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி நீல் இத்தவல, தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கும் விடயங்களை அனவரும் வாசிக்கவேண்டும். குறிப்பாக அவரது தீர்ப்பில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்காலிகமாகவே அறிமுகப்படுத்தப்பட்டதாகும். விடுதலைப்புலிகளை அடக்குவதற்கே அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இன்று அது அரசியல் பழிவாங்கல் போன்ற மோசமான முறையில் பயன்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்திருக்கின்றார். நீதியரசர் நீல் இத்தகவல இந்த நாடாளுமன்றத்தில் சேவை செய்த சிறந்த அதிகாரியாவார்.
அதேபோன்று முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி பயங்ரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தைப் பயன்படுத்தி அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
ஆனால், இந்த வழக்கு எவ்வாறு தொடுக்கப்பட்டது என்பதை வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டு, அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை எனத் தெரிவித்து நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த சில வார்த்தைகளுக்காக அவருக்குப் பாரிய தண்டை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் ஐ.சி.சி.பி.ஆர். மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.