தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று (09.01.2024) மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக பணியாற்றிய 41 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மடபட, பிலியன்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளார்.
திருமணத்துக்குப் பின் வேறு ஒருவருடன் இருந்த தொடர்பு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த அவர் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.