அதிபர் ஆசிரியர்களின் சம்பள தீர்வு யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதாகும் என ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.
இன்று (02) திகதி தலாவாக்கலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே. காரணம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை ஆனது கடந்த 24 வருட காலமாக இடம்பெற்று வந்த ஒன்று. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் சுபோதினி ஆணைக்குழு முன் வைக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு மூலம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாது விட்டாலும் நாட்டின் நிலைமையினை கருத்தில் கொண்டு அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதனால் தொழிற்சங்கங்கள் அந்த ஆணைக்குழுவின் சம்பளத்தை ஆவது பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே அமைச்சரவை உப குழு அதனை நடைமுறைப்படுத்துவதாக தொழிற்சங்கங்களிடம் உத்தரவாதம் அளித்தது. ஆனால் இன்று சிபார்சு செய்யப்பட்ட சம்பவமானது சுபோதினி ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பகுதியை அதனையும் நான்காக பிரித்து நான்கு வருடங்களாக தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் கேட்பது சம்பள உயர்வு அல்ல சம்பள முறண்பாட்டினை தீர்க்குமாறே நாங்கள் கேட்கிறோம். அரசாங்கம் குறைத்து வழங்க தீர்மானித்துள்ள குறைந்த அளவினை கூட நான்கு வருடங்களாக பிரித்து கொடுக்கும் பொழுது ஓய்வூதியம் பெறுபவர்கள் பாரிய அசாதாரணங்களுக்கு உட்படுவர்.
முதல் வருடத்தில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்றால் அவருக்கு ஒரு பகுதி மாத்திரம் தான் இதன் மூலம் கிடைக்கப்பெறும். ஆகவே நாங்கள் கூறுவது, தருகின்ற ஒரு பகுதியாவது முழுமையாக ஒரே தடவையில் தரப்பட வேண்டும். அத்தோடு உங்களுக்கு தெரியும் இந்த சம்பள பிரச்சினை காரணமாக ஆசிரியர் துறை பாரிய சவால் மிக்க துறையாக மாறி வருகிறது. காரணம் இன்று இந்த ஆசிரியர் துறையினை இன்று வரும் இளம் சமுதாயம் தெரிவு செய்வதில்லை.
அதனால் எதிர்காலத்தில் இந்த துறை பாரிய ஒரு நெருக்கடி மிக்க துறையாக மாறுவதோடு இதனை தனியார் மயப்படுத்துவது இலகுவாக இருக்கும் இன்று அரசாங்கம் அதனை தான் செய்கின்றது.
எனவேதான் இந்த ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை முழுமையாக தீர்க்கப்படாத நிலை ஏற்படுகிறது. தனியார் மயப்படுத்தப்பட்டால் இந்த நாட்டில் வாழும் ஏழை எளிய குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கும்.
ஆகவே இந்தத் துறை பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது இந்த போராட்டம் ஆகும்.
இன்று மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அதுமாத்திரமன்றி பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு கல்வியை பெற்றுக் கொள்ள முடியாது பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இது குறித்து ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் கவனத்திலெடுத்து தற்போது சிபார்சு செய்யப்பட்ட குறைந்த தொகையாவது முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.