உலகளவில் நாளொன்றுக்கு 60 குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தை திருமணம் என்பது உலகளாவிய பிரச்னையாக இருந்து வருகிறது. போதிய மன மற்றும் உடல் பக்குவத்தை அடையாத குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பது அவர்களின் வாழ்க்கையை பாதிப்படைய வழிசெய்கிறது.
இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு எனும் சர்வதேச அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் ஆண்டுக்கு 22 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கட்டாயத் திருமணங்களால் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகான கருத்தரிப்பு மற்றும் உடல்நல பாதிப்பு போன்றவற்றின் காரணமாக சிறுமிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உலகளாவில் அளவில் பாதிக்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள ஆய்வானது குறிப்பிட்ட அப்பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 9,000 பேர் குழந்தை திருமணம் தொடர்பாக பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தெற்காசியப் பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு 6 குழந்தைகள் திருமண வாழ்க்கைக்குத் தள்ளப்படுவதாகவும், இதனால் ஆண்டுக்கு 2000 பேர் வரை குழந்தை திருமணங்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்களால் ஏற்படும் இறப்புகளின் பட்டியலில் தெற்காசியாவைத் தொடர்ந்து கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகள் 650 பலி எண்ணிக்கைகளுடன், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் 560 பலி எண்ணிக்கைகளுடன் உள்ளன.
கொரோனா பேரிடர் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆய்வு முடிவானது 1 கோடி குழந்தைகள் 2030 ஆம் ஆண்டுக்குள் திருமண வாழ்விற்குள் தள்ளப்படக்கூடிய அபாயம் நிலவிவருவதாக எச்சரித்துள்ளது.