அனுராதபுரத்தில் சோதிடம் பார்ப்பதில் பிரபலமடைந்த ஞானக்கா என்ற பெண்ணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தியை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உறுதி செய்துள்ளார்.
அனுராதபுரத்தில் இருந்து செயற்படும் ஞானக்காவை சந்திக்க ஜனாதிபதி கோட்டபாய உட்பட பலரும் அங்கு சென்று வருவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் “அரசியல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல ஞானக்காவின் ஆலோசனை பெறுவோம். ஞானக்காவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி இராணுவ உயர் அதிகாரிகளும் முழுமையாக நம்புகின்றனர்.
அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்ட பின்னர் ஞானக்காவை சந்திக்க சென்ற போது அங்கு கோட்டபாய ராஜபக்ஷ இருந்தார்.
இதன்போது அங்கு ஜனாதிபதியுடன் நட்புறவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டேன். நான் மட்டுமல்ல ஹரின் பெர்னாண்டோ, தலதா அத்துகோரள, மைத்திரிபால சிறிசேன, ஹேமா பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், உயர் இராணுவத் தளபதிகள் மற்றும் பிரதம நீதியரசர்களும் அங்கு வருவார்கள்.
நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என ஆலோசனை பெறுவதற்காக அங்கு செல்வதில்லை. சில பரிகாரங்களை மேற்கொள்வதற்காகவே செல்கின்றோம்.
எனது நோய்களுக்கு மருந்து எடுக்க தான் அங்கு செல்வேன். அந்த மருந்துகளால் எனக்கு பலன் கிடைத்தது. ஞானக்கா அரசியல் செய்ய மாட்டார். கட்சி அரசியல் செய்வதாக இருந்தால் அனைத்து கட்சியினரும் அங்கு செல்வதில்லை.
இராணுவ பிரதானிகள், நீதிபதிகள் உட்பட பலர் அங்கு செல்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.