ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நேற்று (6) மாணவர்களைப் பரிசோதித்த சட்ட மருத்துவ அதிகாரி அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் உதய அமரசிங்க தெரிவித்தார்.
நவம்பர் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தனிப்பட்ட தகவலாளரிடமிருந்து நவம்பர் 3 ஆம் திகதி தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், சம்பவம் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர் ஒருவரின் பணப்பை திருட்டு
பாடசாலையின் வகுப்பறை உடைக்கப்பட்டு ஆசிரியர் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தரம் 5 மாணவர்கள் மூவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அதிபர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தரம் 5 மாணவர்களைக் கொண்ட குழுவை அதிபரும் ஆசிரியரும் சேர்ந்து அடித்துத் தாக்கி, பொலிஸாருக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்களை பாடசாலை நூலகத்தில் அடைத்து வைத்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் ஏனைய தரம் 5 மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக அமரசிங்க தெரிவித்தார்.
பொலிஸார் காட்டுமிராண்டித்தனம்
தாங்கள் நூலக அறையில் அதிபர் மற்றும் மற்றொரு ஆசிரியரால் தாக்கப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேரை பொலிசார் வந்து தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் பாடசாலைக்கு வெளியே ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டு, ஜீப்பிற்குள் இருந்த வயர் அவர்களின் வெறும் காலுக்கு அடியில் வைக்கப்பட்டு மின்சாரத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகள் நிறைவடைந்தவுடன், மூன்று பொலிஸாரும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமரசிங்க மேலும் கூறினார்.