நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிச்சென்ற கொவிட் தொற்றாளர் ஒருவர் குருந்துவத்த காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தொற்றாளரை மீண்டும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கும் நாவலப்பிட்டி – குருந்துவத்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். தப்பிச்சென்ற தொற்றாளர் நாவலப்பிட்டி, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்றாளரின் நோய் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்பின்னர், குறித்த தொற்றாளர் பயணிகள் பேருந்தொன்றின் மூலம் வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது, குருந்துவத்த மேரிவல காவலரணில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டு நோயாளர் காவு வாகனம் மூலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். அத்துடன், இந்நபருக்கு நெருக்கமாக பேருந்தில் பயணித்த சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.