வென்டிலேட்டர்கள் , பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு துருக்கி நன்கொடையாக வழங்கல்
கோவிட்-19 சவால்களை எதிர்கொள்வதற்காக வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு துருக்கி நன்கொடையாக வழங்கியுள்ளது.
துருக்கி அரசாங்கத்தால் நன்கொடையளிக்கப்பட்டு, இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டெமட் செகெர்சியோக்லு அவர்களால் 2021 பெப்ரவரி 18ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்ட 10 வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே முறையாக ஏற்றுக்கொண்டார். இலங்கையின் தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவாக துருக்கி அரசாங்கத்தால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இந்த பெறுமதிமிக்க நன்கொடையை வழங்கியமைக்காக இலங்கை அரசாங்கத்தின் நன்றியையும், ஆழ்ந்த பாராட்டையும் துருக்கி அரசாங்கத்திற்குத் தெரிவித்த வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார். பொருளாதாரத் துறையில் உட்பட, அண்மைக் காலங்களில் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும் வெளியுறவுச் செயலாளர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும், கொழும்பில் உள்ள துருக்கித் தூதரகத்தின் தூதரக ஊழியர்களும் நன்கொடையைக் கையளிக்கும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.