மக்காச்சோள அறுவடை குறைவினால் கோழிப்பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும் போகத்தில் சுமார் 110,000 ஹெக்டேயர் நிலப் பரப்பில் சோளம் பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சோள உற்பத்தி அதிகரிக்க முடிவு
இலங்கை வருடாந்தம் 250,000 முதல் 280,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தை அறுவடை செய்தாலும், 2021 பெரும் போகத்தில் 90,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தையே பெற்றுக்கொண்டது.
இலங்கையின் வருடாந்தத் தேவை சுமார் 400,000 மெட்ரிக் தொன்னாகும். அதேவேளை மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பயிர் செய்கைக்கு பயன்படுத்தக்கூடிய சுமார் 50,000 மெட்ரிக் தொன் சோள விதைகள் தங்களிடம் இருப்பதாகவும் மேலும் 25,000 மெட்ரிக் தொன் நன்கொடையாக எதிர்பார்க்கப்படுவதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தொழில்துறையை விரிவுபடுத்தும் நம்பிக்கையில் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கால்நடை தீவனத்தின் முக்கிய அங்கமான சோளத்தின் தட்டுப்பாடு காரணமாக கோழிப்பண்ணை தொழில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.