இலங்கையில் எரிபொருட்களின் தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில் மட்டக்களப்பில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் விவசாய செய்கையில் ஈடுபடும் விசாயிகள், வாகனங்களைக் கொண்டு அன்றாட தொழில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்துக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வரும் என அறிந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 4 கிலோ மீற்றர் அளவில் வரிசையில் தங்களுக்குத் தேவையான பெற்றோல், டீசலைப் பெறுவதற்காகக் காத்திருந்தனர்.
இந்நிலையில், வாழைச்சேனை எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வராது என்று தெரிவித்த நிலையில் வரிசையில் நின்ற பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் அவ்விடத்தில் பொலிஸாரின் தலையீட்டினால் குழப்பநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பெற்றோல் வரும்போது வழங்கப்படுவதற்காக அனுமதித் துண்டுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று டீசல் மாத்திரம் வாகனங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இதற்கும் வாகனங்கள் சுமார் நான்கு கீலோ மீற்றர் தூரம் வரை நின்று டீசலைப் பெற்றுக்கொண்டன.