எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் இணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி என்ற வகையில், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி நான் எப்போதும் சிந்தித்துள்ளேன்.
மேலும், வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் போது, எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாகவே இருக்கும். எதிர்காலத்தைப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
“அன்னிய செலாவணி உருவாக்கம், முதலீட்டு ஊக்குவிப்பு, ஏற்றுமதி வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போதுமான உரம் வழங்கல், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.
உலகளாவிய தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து அரசாங்கம் தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது வர்த்தக சமூகம் சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் தவறான கருத்துக்களை திருத்த முடியும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. விலைக் கட்டுப்பாட்டில் இருந்து விலகும் அரசின் முடிவை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மொத்தமாக எரிபொருளை பெற்றுக்கொள்வது சவாலான விடயம் எனினும் அபிவிருத்தி மற்றும் தொழில்துறைக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.