வத்தளை நகரம் “மேற்கு பிராந்தியத்தின் பசுமையான வாழ்வாதாரமாக” அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், இது தொடர்பான அபிவிருத்தி திட்ட சட்ட வரைவு தயாரிக்கப்படும்.
வரைவு செய்யப்பட்ட வத்தளை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான முக்கிய கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (24) பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இங்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் வத்தளை – மாபோல மாநகர சபையின் செயலாளர் பீ.ஏ.எஸ்.எஸ். சந்தருவன் மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் ஆர்.எச்.பி.வசந்தி விக்ரமரத்ன ஆகியோரிடம் வத்தளை நகர அபிவிருத்தி திட்டத்தை முன்வைத்தார்.
இந்த வரைவு வத்தளை – மாபொல நகரசபை மற்றும் வத்தளை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அவர்களினதும் மற்றும் பொதுமக்களினதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படும். இதனை சமர்ப்பிக்க.60நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை வத்தளை நகர அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி நிர்வாகப் பிரதேசமாக நியமிக்கப்படும் எந்தவொரு பிரதேசமும் நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும். அதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடுகளை மேற்கொள்ளக் கடமைப்பட்டுள்ளது. 1978 / 41 ஆம் இலக்க நகர அபிவிருத்திச் அதிகார சபை சட்ட மூலம் அது உரித்தாகிறது.
வத்தளை நகர அபிவிருத்தி திட்டம் “மேற்கு பிராந்தியத்தின் பசுமையான வாழ்வாதாரம்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்படும். இது காணி. மற்றும் கட்டிட மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி மூலோபாயம், கழிவு வசதி மேம்பாடு மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அபிவிருத்தி ஆகிய 04 முக்கிய மூலோபாயங்களின் அடிபடையில் இந்தத் திட்டம் செய்ற்படுத்தப்படும். மேலும், இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கரையோர சுற்றுலா வலய அபிவிருத்தி, மீன்பிடி பொருளாதார அபிவிருத்தி, குறைந்த வருமானம் மற்றும் கலப்பு அபிவிருத்தி, கடல் உணவு வீதிகள், கெரவலப்பிட்டி பரிமாற்ற மையத்தை மையமாகக் கொண்ட நேரியல் பூங்கா அபிவிருத்தி, அனர்த்த தணிப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அபிவிருத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
22.8.1995 ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம் 885/6 இன் கீழ் வத்தளை கடற்கரையிலிருந்து 1 கி.மீ தூரம் நகரப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 19.4.2002 ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம் 1232/5 இன் கீழ் வத்தளை மாபோல நகரசபை பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 9.9.2016 இல் 1983/30 இலக்கத்தின் கீழ் கம்பஹா மாவட்டமே நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 57.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட வத்தளை நகரம் 46 கிராம சேவைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 2030 ஆண்டுக்குள், வத்தளை நகரத்தின் மொத்த மக்கள் தொகை 216,926 ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வத்தளை நிர்வாகப் பிரதேசம் கொழும்பு நகருக்கு மிக அருகில் இருப்பதால், மிதமான அடர்த்தி மற்றும் அதிக நகர்ப்புற பண்புகள் கொண்ட பிரதேசத்தையும் கொண்டுள்ளது. மேலும், பிரதேசத்தின் வடக்கு பகுதி மற்றும் திட்டமிடல் எல்லையின் உள் பகுதிகள் அதிக உணர்திறன் கொண்ட முத்துராஜவெல ஈரநில சூழலில் அமைந்துள்ளன.இது நாட்டின் மிகப்பெரிய கரையோர ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு என அறியப்படுகிறது.
மேலும், மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் கெரவலப்பிட்டி கைத்தொழில் வலயம், டிகோவிட்ட துறைமுகமும் இந்த எல்லையில் அமைந்துள்ளது. ஹமில்டன் கால்வாய் மற்றும் ஹாலந்து கால்வாய், பண்டைய காலங்களிலிருந்தே சரக்கு போக்குவரத்துக்கு பெயர் பெற்றவை, இது வத்தளை .நிர்வாகப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இது கொழும்பு நகருக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், வத்தளை நகரம் குடியிருப்பு வசதிகளை வழங்கும் பிரதேசமாகவும் புகழ்பெற்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எம்.பி.ரணதுங்க, பிரியாணி நவரத்ன பணிப்பாளர் (மூலோபாய திட்டமிடல்), வை.ஏ.டீ.கே குணதிலக்க பணிப்பாளர் (மேற்கு மாகாணங்கள்), பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹேமால். லக்பதும் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.