மாடுகளில் பரவி வந்த தோல் கட்டி வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (24) முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் பி.சி.எஸ் பெரேராவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாடுகளை தாக்கும் வைரஸ் நோய் நிலைமையை கட்டுப்படுத்துதல் மற்றும் புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகுவதைக் குறைத்தல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக டொக்டர் பெரேரா தெரிவிக்கின்றார்.
அறிவித்தலின் பிரகாரம் குளியாப்பிட்டிய, பன்னல, கட்டுபொத, பிங்கிரிய, ரஸ்நாயக்கபுர, மஹவ, கல்கமுவ, கிரிபாவ, கொபேகனே, நிகவெரட்டிய, அஹெதுவெவ, அம்பன்பொல, கொட்டாவெஹர மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கால்நடை பிரிவுகளிலும் மாடுகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தோல் தொடர்பான வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாடுகளை கொண்டு செல்ல தடை விதித்ததுடன், மாட்டிறைச்சி உண்ணக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்ட போது, வடமேல் மாகாணத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் சென்ற பெருமளவிலான லொறிகள் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டன.
அத்துடன் , நோய்க்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கூட எடுக்கப்படாத நிலையில், ஒரு மாத காலத்துக்குள் இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கால்நடை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.